“உன்னாலே முடியாது” ஒரு கூட்டம் நம்ப வைக்கும்
உன் திறமை நீயறிந்தால் உயரங்கள் மண்டியிடும்
ஏளனங்கள் உனைச் சுற்றி எப்போதும் உலவிவரும்
கேளாது போனாலும் கொக்கரிக்கும் கூச்சலிடும்
எது நன்று எது தீது எது உண்மை எது சூது?
பதமாக ஆராய்ந்துப் பதரெல்லாம் நீக்கிவிடு.
தடைநூறு வந்தாலும் தாமதமே நேர்ந்தாலும்
இடிநூறு வீழ்ந்தாலும் இருள்சூழ்ந்து நின்றாலும்
உள்ளத்தில் ஒளியோடும் உழைக்கின்ற மகிழ்வோடும்
அள்ள அள்ளக் குறையாத ஆற்றல்கொள் அதுபோதும்.
பேரறிவே சொன்னாலும் பெண்டாட்டி சொன்னாலும்
ஊரிலுள்ள நால்வரிடம் ஒருவார்த்தை கேட்டுக்கொள்
ஊரிலுள்ள நால்வரிடம் ஒருவார்த்தை கேட்டாலும்
சாராமல் சங்கதிகள் சரிபார்க்கக் கற்றுக்கொள்
இத்தகைய தெளிவோடும் இறங்காத அறிவோடும்
புத்தகத்தின் துணையோடும் புதுவழியில் பயணம்போ
பாதையே இல்லாமல் பரிதவிக்கும் நிலைவந்தால்
பாதையை உருவாக்கு பட்டாளம் அமைந்திடுமே.
சீனிராஜ் சிவகுமார்
28-ஆகஸ்ட்-2007