rediff ILAND
Welcome Guest, | Create your own iLand| Sign In  | New User? Get Started
Home
iLand
Blogs
Friends/Contributors
Guestbook  
 
Seeniraj Sivakumar
Categories
Self Development
Notice Board
Storyline
Bodyline
Bull Run
Shivamaha
Tamil Blogs
My Top Posts
The Empty White ...
The Power Factor...
Bull Run-1...
வா&#...
Favourites 1
My writings
What is an RSS feed?
RSS Feed 
seenirajsiva.rediffiland.com/ 
Recent Posts
By  Seeniraj Sivakumar   18:24 | 14/Mar/2008 | 3 Comment(s)
ஆயுள் ரேகை

முன்குறிப்பு:

நினைவில் நிற்கும் இரண்டு முயற்சிகள்:
1. திருப்பதி தேவ தூதர்களைக் கொண்டு எங்கள் பாராளுமன்றத் தொகுதி மக்களுக்காக வைகோ முன்பு நடத்திய இலவச மருத்துவ முகாம்.
2. மூலைமுடுக்கெல்லாம் சென்று சேர்ந்திருக்கும் கலைஞரின் சிற்றுந்துத்திட்டம்.

1

மல்லிப்புதூரில் பிள்ளையாருக்கும் கிருஷ்ணனுக்கும் நன்கொடை உபயத்தில் தனித் தனியே காரை வீடுகள் இருக்கின்றன.
முத்தாலம்மனும் மாரியம்மனும் ஆஞ்சநேயரும் பக்கவாட்டில் சிவப்பு வெள்ளைப் பட்டைகள் தீட்டப்பட்ட மேடைகளில் வீற்றிருந்தால் போதும் என்று பக்தர்கள் தீர்மானித்து விட்டார்கள்.
இந்தச் சிறு, குறு, பெருந்தெய்வங்களுக்கு அருகிலேயே மஞ்சள் நிறக் கட்டிடமொன்றை நீர் தோன்றி புரோட்டோசோவா தோன்றாக் காலத்திலேயே எழுப்பிவிட்டது மாநில அரசு.
அதற்கு ஆரம்ப சுகாதார நிலையம் என்று பெயரும் வைத்திருக்கிறது.
2

எம்.பி, எம்.எல்.ஏக்களைக் குறை சொல்லாதீர்கள். அவர்கள் தொகுதிப்பக்கம் அடிக்கடி எட்டிப் பார்க்கிறார்கள்.
எம்.பி.பி.எஸ் படித்த தேவ தூதர்களுக்காகத் தான் இன்னும் காத்திருக்கின்றன இந்தியாவின் ஐந்தே முக்கால் லட்சம் மல்லிப்புதூர்கள்.

3

மல்லிப்புதூர் விவசாயிகள் வைத்திருக்கும் என்டோசல்ஃபானில் நூறு மில்லியை யாரேனும் அருந்திவிட்டாலோ ஓடைக்காட்டில் பிரண்டைச் செடி மறைவில் காலைக் கடன் முடிக்கையில் பாம்பு  தீண்டிவிட்டாலோ அவருக்கு உடனடி மருத்துவ உதவி ஸ்ரீவில்லிபுத்தூரில் தான் கிடைக்கும்.
எங்கள் ஊரிலிருந்து சுமார் பத்து கிலோமீட்டர் தொலைவில் இருக்கின்றன ஸ்ரீவில்லிபுத்தூர் மருத்துவமனைகள்.
சுடுகாடு அவ்வளவு தூரமில்லை. அரை கிலோமீட்டரோ என்னவோ தான்.

4

எண்ணெய் சுத்திகரிப்பு, பெட்ரோகெமிக்கல் தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்களுக்குத் தெரிந்திருக்கும்.
தொழிற்சாலையின் ஒரு பகுதியில் தீப்பிடித்து விட்டதாக அல்லது நச்சு வேதிப்பொருள் கசிந்து விட்டதாகக் கிளப்பி விட்டு சோதனை செய்வார்கள் பாதுகாப்புத் துறை ஆட்கள்.
ஏதேனும் வினைபுரிகலனின் கீழே ஊழியர்களில் சிலரை மயங்கிக் கிடப்பது போல் நடிக்கச் சொல்வார்கள்.
இதன் நோக்கம் நெருக்கடி நிலைகளில் ஆலையின் தீயணைப்பு வீரர்கள், மருத்துவமனை ஊழியர்கள், தொழிலாளர்கள் எப்படிச் செயல்படுகிறார்கள்? நிஜமாகவே அவசர காலம் ஏற்பட்டால் சமாளிக்கும் அளவுக்குப் போதிய பயிற்சி பெற்றிருக்கிறார்களா? என்று ஆராய்வதே.
இதற்கு mock drill என்று பெயர்.
விபத்து நடந்ததாக அறிவிக்கப்பட்ட எத்தனையாவது வினாடி தீயணைப்பு வாகனம் சம்பவ இடத்துக்கு வந்து சேர்ந்தது? மயங்கிக் கிடந்த ஊழியர் கண்டுபிடிக்கப்பட்டுத் தகவல் தெரிவிக்கப்பட்ட எத்தனையாவது வினாடி மருத்துவ ஊர்தி வந்து சேர்ந்தது என்றெல்லாம் பார்ப்பார்கள். இதை response time என்பார்கள்.
5

மல்லிப்புதூரிலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் சுமார் பத்து கிலோமீட்டர் தொலைவில் இருப்பதாகச் சொன்னேன் இல்லையா?
ஏறத்தாழ முந்நூறு வீடுகள் உள்ள எங்கள் கிராமத்தில் கோவிந்தராஜன் என்ற தேநீர்க்கடை உரிமையாளர் அழைப்புந்து வைத்திருக்கிறார். எங்கள் உறவினர் ஒருவர் ஆட்டோ வைத்திருக்கிறார்.
இவர்கள் சவாரிக்கு ராஜபாளையத்துக்கோ சிவகாசிக்கோ போன நேரத்தில் எமன் யார் வீட்டுக் கதவையாவது தட்டினால் தப்பிக்கக் கால்களை நம்ப வேண்டும். அரசாங்கப் பேருந்துக்குக் குறுக்கே கைகாட்ட வேண்டுமென்றால் இரண்டு கிலோமீட்டர் தொலைவிலுள்ள பிரதான சாலையைப் பிடிக்க வேண்டும்.
ஊருக்குள்ளேயே வரும் சிற்றுந்துகளின் கால அட்டவணையும் காலனின் அட்டவணையும் ஒத்துப் போகுமா என்று சொல்ல முடியாது.
யாரேனும் டக்கர் வண்டியைக் கொடுத்துதவினால்தான் உண்டு.
Response time எவ்வளவு ஆகும்?

6

பத்து நிமிடம் முன் வரை சிரித்துப் பேசிக்கொண்டிருந்த ஒற்றைக்கொரு தவப்புதல்வனின் உடலைச் சுற்றியழும் பெற்றோர், எல்லோரும் பார்த்திருக்க எவராலும் காப்பாற்ற முடியாமல் தன்னைத் தானே தகனம் செய்துகொண்ட தாவணிப் பூ, கஞ்சியூற்றா மகனைப் பெற்றதால் வயிற்றிலும் நுரையீரல்களிலும் கிணற்று நீரை நிரப்பிக் கொண்ட தாய் என எத்தனையோ பட்டிக்காட்டு மரணங்கள் பார்த்திருக்கிறேன்.
பூச்சிக்கொல்லி அருந்தியவனை அது கொண்டுபோனதை விட வாயிலும் வயிற்றிலும் அடித்தலறி சரியான முதலுதவி செய்யத்தெரியாமல் இறுதிப்பயணத்துக்கு ஏற்பாடு செய்த கதைகளே அநேகம்.
செயின்ட் ஜான்ஸ் ஆம்புலன்ஸ் அஸோசியேஷன் போன்ற அமைப்புகள் முதலுதவிப் பயிற்சி வகுப்புகளை கிராமங்களுக்கும் விரிவுபடுத்தினால் பத்துக்கு ஏழு மரணங்கள் ஒத்திவைக்கப்படும்.
 
7

 ஜாம்நகர் தொழிற்சாலை நகரிய மருத்துவமனையொன்றில் அந்நிறுவன ஊழியர்கள் இருபதாயிரம் பேருக்கும் தனித்தனியே நோட்டுப்புத்தகம் போட்டு அவர்களின் ஆரோக்கிய வரலாறு பராமரிக்கப்படுகிறது.
 கற்பனைப் பணி நியமன எண் 6789 ஐ அங்குள்ள கணிப்பொறியில் தட்டிப் பார்ப்போம்.
ராகேஷ் மேஸ்வானியின் மருத்துவக்குறிப்புகள் நமக்குக் கிடைக்கின்றன.
செப்டெம்பர் 2006 இல் ஆலை வளாகத்தில் கந்தக அமிலம் இடக்கையில் பட்டு பனிக்கட்டி ஒத்தடம் தரப்பட்டதும் வலிமறக்கும் ஊசி போடப்பட்டு சில்வரெக்ஸ் களிம்பு தடவப்பட்டதும் பாரஃபின் எண்ணெய் வழங்கப்பட்டதும் பதிவாகியிருக்கின்றன.
கடைசியாக 2007 ஆகஸ்டில் அவருடைய ரத்த அழுத்தம், உயர், குறைவடர்த்தி லிபோப்ரோட்டீன் அளவு, ட்ரைக்ளிசரைடுகள், காலை உணவுக்கு முந்தைய பிந்தைய சர்க்கரை அளவுகள் போன்ற குறிப்புகள் தெரிய வருகின்றன. 
அவருக்கு வழங்கப்பட்ட ஆலோசனைகளையும் அறிந்துகொள்ள முடிகிறது.
 இதை ஏன் கிராம சுகாதார நிலையங்களில் நடைமுறைப்படுத்தக் கூடாது?
 ஒரே ஒரு கணிப்பொறி போதும். மல்லிப்புதூர் சுகாதார நிலையத்தோடு அருகிலிருக்கும் ஐந்து கிராமங்களை இணைத்துவிட்டால் போதும். போதிய மருத்துவ உபகரணங்களும் தொலைமருத்துவ சேவையும் இருந்தால் போதும். அவசரகாலத்துக்காக ஒரே ஒரு மருத்துவ ஊர்தி வாங்கினால் போதும்.
 உயர்கல்வி பயிலும் அனுமதியோடு வேண்டிய வசதிகள்  செய்துகொடுத்தால் மருத்துவரும் செவிலியும் 24 மணி நேரமும் இருக்கச் சம்மதிக்காமலா போய்விடுவார்கள்?
 ஐந்து கிராமங்களில் சுமார் இரண்டாயிரம் வீடுகள். சராசரியாக வீட்டுக்கு நான்கு பேர் என்று வைத்துக் கொண்டால் எட்டாயிரம் பேர். இவர்களின் மருத்துவக் குறிப்புக்களைப் பாதுகாக்க முடியாதா என்ன? காய்ச்சல், மண்டையடி என்றால் மல்லிப்புதூரான் ஸ்ரீவில்லிபுத்தூருக்குத்தான் ஓட வேண்டுமா?
 பொருளாதார வானிலையைப் பொறுத்தவரை உலகின் கோடையும் குளிரும் இந்தியாவை அதிகமாக பாதிக்காது என்றே கோட்டு சூட்டுப் போட்டவர்கள் சொல்கிறார்கள்.  வசந்தம் இனி நிரந்தரம். அதே சமயம்
மனித வளர்ச்சிக் குறியீட்டில் (HDI) இந்தியாவின் இடம் என்ன?
 அரசின் நல்ல பல திட்டங்கள் இன்னும் திறமையாகச் செயல்படுத்தப் படவேண்டுமா? வெட்கப்படாமல் தொழிற்துறையினரிடமிருந்து கற்றுக்கொள்ளலாம். அவர்களையும் ஈடுபடுத்தலாம்.
 உலகத்தரத்தில் மருத்துவசேவையை இளைத்த கட்டணத்துக்கு, முடிந்தால் இலவசமாக, மாயத்தேவன்பட்டியிலும் மாலூரணிப்பட்டியிலும் வழங்கமுடிந்தால் மத்திய மாநில அரசுகளின் சாதனை மகுடங்களில் மேலும் ஒரு வைரக்கல்  பதிக்கப்படும்.
 
8

அதுவரை...

பெரிய டாக்டர்கள் முத்தாலம்மனும் மாரியம்மனும் இருக்கிறார்கள்.
-------------------------------------------------------------------------------------
சீனிராஜ் சிவகுமார்
14-மார்ச்-2008
-------------------------------------------------------------------------------------
 
பின்குறிப்பு:
நவீன கிராம நிர்வாகம் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று தெரிந்துகொள்ளும் விருப்பமிருந்தால் இவற்றைப் படித்துப் பார்க்கலாம்
1. புரா திட்டம்
2. அரசியலமைப்புச் சட்டத்தின் Art. 243, அதன் உட்பிரிவுகள். 73 ஆம் திருத்தம் மூலம் சேர்க்கப்பட்ட 29 அம்சப் பட்டியல்.

Permalink 
By  Seeniraj Sivakumar   17:27 | 20/Jan/2008 | 16 Comment(s)
மேரி க்யூரி

1

மேரி க்யூரியின் சாதனைகளுக்கு அங்கீகாரமாக இரண்டு முறை நோபல் பரிசும், தண்டனையாக இரத்தப்புற்று நோயும் கிடைத்தன.

ஆனால் அந்த நோயால் அவர் புகழைக் கல்லறைத் தோட்டத்துக்கு எடுத்துச்செல்ல முடியவில்லை.

2

பெரும்பாலானோர் கஷ்டப்பட்டு முன்னேறுகிறார்கள்.

மேரி க்யூரியின் வாழ்க்கை வித்தியாசமானது.

இவர் முன்னுக்கு வருவதற்கு முன்னும் கஷ்டப்பட்டார்.
முன்னுக்கு வருகையிலும் கஷ்டப்பட்டார்.
முன்னுக்கு வந்தபின்னும் கஷ்டப்பட்டார்.

3

போலந்தும் பிரான்சும் போட்டி போட்டு இந்தப் பெண்மணிக்கு அஞ்சல் தலை வெளியிட்டதும் பணத்தாளில் முகம் அச்சிட்டதும் படித்த இடத்திலேயே முதல் பேராசிரியை பதவியும் இவர் பெயரில் ஆய்வகம் தொடங்கப்பட்டதும் நிலைத்த புகழுக்கான நிமிடநேர ஒத்திகைகள்.

விசையின் அலகை நியூட்டன் என்கிறோம்.

அழுத்தத்தின் அலகுகளில் ஒன்றைப் பாஸ்கல் என்கிறோம்.

அதுபோல் கதிரியக்கத்தை அளக்க உதவும் அலகை க்யூரியென்று என்று அறிவியல் உலகம் வரையறை செய்ததே.. அதுதானய்யா பெரிய கௌரவம்.

அது மட்டுமா? யுரேனியத்துக்குப் பிந்தைய தனிமங்களில் ஒன்றுக்கு க்யூரியம் என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.

4

எழுத்தாளர் மகன் எழுத்தாளராகவும் நடிகர் மகன் நடிகனாகவும் இசையமைப்பாளர் மகன் இசையமைப்பாளராகவும் வெற்றிக்கொடி நாட்டியிருப்பதைப் பார்த்திருக்கிறோம்.

அறிவியலிலும் அப்படிச்சில குடும்பங்கள் உண்டு.

மேரி க்யூரியின் கணவர் பியரி க்யூரியும் நோபல் பரிசு பெற்றவர்.

இத்தம்பதியின் மகள் ஐரீன் ஜுலியட் க்யூரியும் நோபல் பரிசு பெற்றவர்.

5

ஐரோப்பாவிலும்; சமையலறை மட்டுமே பெண்களின் ஆய்வகமாக இருந்த காலம் அது.

இவருடைய சகோதரிக்கு மருத்துவக்கல்வி கிடைத்தது.

மேரி க்யூரியோ மருத்துவக்கல்லூரியில் இடம் மறுக்கப்பட்டதால் தான் அடிப்படை அறிவியல் கல்வியைத் தேர்ந்தெடுத்தார்.

ரேடியோதெரபி அல்லது கதிர்சிகிச்சை என்ற வார்த்தையை இன்று நீங்கள் மருத்துவத்துறையில் கேள்விப்படுகிறீர்கள் என்றால் அதில் இவர் பங்கும் இருக்கிறது.

6

ரேடியம் கதிர்வீச்சு அமிர்தமில்லை. ஆனால் அளவுமீறினால் அது நஞ்சுதான்.

ரேடியம் புற்றுநோய் செல்களை அழிக்கவல்லது. அதைக் கண்டுபிடித்த மேரி க்யூரி புற்றுநோயால் இறந்தார்.

7

மேனிலைப்பள்ளியில் தங்கப்பதக்கம் பெற்ற மேரி க்யூரி படிப்புக்குச் சில ஆண்டுகள் இடைவேளை விட்டு ஒரு வீட்டில் ஆயா வேலை செய்தார்.

அக்காவைப் படிக்க வைத்தார்.
அக்கா மருத்துவரானார்.
தங்கையைப் படிக்கவைத்தார்.

8

அறிஞர்கள் உலகத்திலும் ஆன்ட்ரஜன், ஈஸ்ட்ரஜன் போராட்டங்கள் இல்லாமல் போவதில்லை.

வேலைக்காரியாக இருந்தபோது எஜமான் மகன் மேல் காதல்வயப்பட்டார் மான்யா என்ற மேரி.

கதிரியக்கத் தனிமங்கள் தன் கதிரியக்கத் தன்மையைத் துறந்தும் சிதைந்தும் நிலைத்த தனிமமாக மாறும் முயற்சியில் பாதி கதிரியக்கத்தை இழக்க ஆகும் காலத்தை அணு விஞ்ஞானத்தில் அரை-ஆயுள் காலம் என்போம்.

ரேடியம் ஐசோடோப் - 226 இன் அரை-ஆயுள் காலம் 1620 ஆண்டுகள்.

மேரி என்ற மான்யாவின் முதல் காதலின் முழு ஆயுள் காலம் சில மாதங்கள்.

9

கணக்குப் பதிவியலில் tangible assets, intangible assets என்று கேள்விப்பட்டிருப்பீர்கள்.

உங்கள் தங்க நகை, கார், காணிநிலம், பத்துப் பதினைந்து தென்னை மரங்கள் எல்லாமே தொட முடிந்த சொத்துக்கள் (tangible).

அறிவு தொட்டு உணரமுடியாத சொத்து (intangible).

சரியான முறையில் பயன்படுத்தினால் தொட்டு உணரமுடியாத சொத்தே தொட்டு உணரமுடிந்த சொத்தை ஈட்டித்தரும்.

ஆனால் மேரியின் அப்பாவோ ஆசிரியராக இருந்தும் பொருளீட்டும் ஆசையில் இருப்பதை இழந்தவர்.

ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி.
ஆனால் ஐந்தாவதாக மேரியென்னும் ஐஸ்வர்யத்தைப்  பெற்றுக்கொண்டவர்.

மேரி க்யூரி, பியரி க்யூரி தம்பதியோ ரேடியத்தைப் பிரித்தெடுக்கும் முறைக்குக் காப்புரிமையே பெற்றுக்கொள்ளவில்லை. ஒருவேளை பெற்றிருந்தால் ஆல்ஃப்ரட் நோபல் மாதிரியே இவர்களும் கோடீஸ்வரர்கள் ஆகியிருக்க முடியும்.

மேரியின் குடும்பத்தில் அறிவுதான் செல்வம்.

10.

க்யூரி தம்பதியினரின் ரேடியம் போலோனியம் கண்டுபிடிப்பு ஆய்வுகளை மழையும் வெயிலும் வேடிக்கை பார்த்தனவாம். அவர்களின் ஆய்வகக் கூரைக்கு சல்லடையே பரவாயில்லையாம்.

ஆய்வு நிதியை அமெரிக்காவில் திரட்டினாராம் அம்மணி. நோபல் பரிசுத்தொகையில் ஒரு வீட்டை வாங்கிக்கொண்டு மிச்சத்தை ஆய்வுக்காகவே செலவிட்டாராம். முதல் உலகப்போரின் போது பதக்கங்களையும் தானம் தந்தாராம்.

உலகப்புகழின் உச்சியில் இருந்து இறங்கிவந்து அப்போரில் காயம் பட்ட வீரர்களின் எக்ஸ்-ரே தொழில்நுட்பாளராய்ப் பணி செய்தவர் இவர்.

இந்தியாவில் இப்படிப்பட்டவர்களுக்கு ஒரு பட்டம் வைத்திருக்கிறோம் : பிழைக்கத் தெரியாத பெண்.

11

மோதிரக்கைகள் எல்லாம் குட்டிவிட முடியாது. மோதிரம் அணிந்தவரின் மூளையும் அதற்குத் தகுதியானதாய் இருக்கவேண்டும்.

(யுரேனியக்) கதிர்வீச்சைக் கண்டுபிடித்த அறிஞர் ஹென்றி பெக்கெரல் தான் மேரி க்யூரியின் முனைவர் ஆய்வுப்படிப்பில் குரு.

க்யூரி தம்பதியினர் இவருடன் தான் நோபல் பரிசைப் பகிர்ந்துகொண்டார்கள்.

12

இரண்டாம் முறை மேரி க்யூரிக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட போதுதான் மூன்றாந்தர விமர்சனங்கள் கிளம்பின.

பேனாக்களில் மஞ்சள் மை அவசரம் அவசரமாக நிரப்பப்பட்டது.

சாலை விபத்தில் கணவனைப் பறிகொடுத்ததால் நோபல் குழு விட்ட அனுதாபக் கண்ணீர் என்றார்கள்.

கடலடி ஆய்வுக்குப் பயன்படும் சோனார் ஒலிமுறையைக் கண்டுபிடித்தவரும் பியரி க்யூரியின் சீடருமான பால் லாங்வின்னுடன்
இணைத்துப் பேசினார்கள்.

அது எளிது.

வேதியியலில் புதிதாய்க் கண்டுபிடிப்பது தான் கஷ்டம்.

விவரமான சோதனை முறைகள் இருந்த போதே எப்போதோ யாரோ கண்டுபிடித்துவிட்ட உப்புக்களின் கார மூலத்தையும் அமில மூலத்தையும் மறுபடியும் கண்டுபிடிப்பதற்குள் விழிபிதுங்கி நின்ற கல்லூரி அனுபவத்தை வைத்துச் சொல்கிறேன்.

13

மேரி க்யூரியைப் பற்றி நிறைய்ய்ய்ய எழுதலாம். கடைசி வரை விசுவாசமாய் வந்த ஏழ்மை, மன அழுத்தம், இளமையிலும் இடையிலும் பார்த்த மரணங்கள், கேட்ட சுடுசொற்கள், காலன் தந்த கடைசி நேர அவஸ்தைகள்..

இத்தனைக்கும் நடுவில் இவருடைய ஆராய்ச்சி சஹாராவில் நைல் நதி.

மனவலிமை =  மேரி க்யூரி.

14

மேரி க்யூரி
தோற்றம்: 1867
மறைவு: 1934 என்று சொல்கிறார்கள்.

நான் நம்பவில்லை.

 

Permalink 
By  Seeniraj Sivakumar   09:51 | 13/Jan/2008 | 2 Comment(s)
ஹென்றி ஃபோர்டு

1

ஹெலன் கெல்லருக்குப் பார்வை இல்லை. நோக்கம் இருந்தது.

நம்மில் எத்தனை பேருக்கு இரண்டும் இருக்கின்றன?

2

ஹென்றி போர்டுக்கு ஒரு நோக்கம் இருந்தது.

அமெரிக்காவில் கார்காலம் ஆரம்பமாக வேண்டும் என்ற நோக்கம்.

தன் கனவுக்கு நான்கு சக்கரங்களையும் உள் எரி இயந்திரத்தையும் மலிவு விலையில் பொருத்த அவரால் முடிந்தது. அவரது மாடல்-டி கார் நதியா வளையல், குஷ்பு கம்மல் மாதிரி விற்றுத் தீர்ந்தது.

நேரத்தை மிச்சப்படுத்து, வேலையை எளிமையாக்கு என்கிற எர்கானமிக்ஸ் சிந்தனை தான் போர்டு மோட்டார் நிறுவனத்தில் அஸெம்ப்ளி லைன் (பொருத்து வரிசை) உத்தியானது.

வியாபாரிக்குள் கவிஞன் இருக்கிறான். கணக்கன் இருக்கிறான். கண்டுபிடிப்பாளன் இருக்கிறான். அந்த வியாபாரி பள்ளத்தாக்கில் கிளம்பி சிகரமாகியிருந்தால் வள்ளலாகவும் இருக்கிறான்.

3

எடிசன் மின்சார நிறுவனத்தில் பதினாறு வயதில் இயந்திரப் பணியாளராகப் பயிற்சி பெறச் சேர்ந்தார் ஹென்றி ஃபோர்ட்.

தாமஸ் ஆல்வா எடிசனின் நண்பராக உயர்ந்தார்.

4

தொழிற்சாலை இயந்திரங்களில் தாமும் நட்டு போல்ட்டுகளாய் வாழ்ந்து கொண்டிருப்பவர்களை மரியாதையோடு பாருங்கள்.

அவர்களில் யாரோ சில பேர் ஹென்றி போர்டாக விஸ்வரூபம் எடுக்கப் போகிறார்கள்.

காற்றை விட கனமானது எப்படிப் பறக்கும் என்று முணுமுணுக்கப்பட்ட ரைட் சகோதரர்களின் மிதியுந்து வான்நோக்கி உயரவில்லையா?

ஷெல் நிறுவன எரிபொருள் அங்காடியில் பணிபுரிந்த தொழில்மேதை திருபாய் அம்பானியின் நிறுவனம் இன்று ஷெல்லுடனே ஒப்பந்தங்கள் கையெழுத்திடவில்லையா?

5

அடுத்தடுத்த தலைமுறைகளிலும் வெற்றியைத் தக்கவைத்துக் கொள்வது பெரிய விஷயம் தான்.

ஆனால் பூஜ்யத்திலும் பூஜ்யத்துக்குள்ளிருந்தும் ஆரம்பிப்பவன்தான் ரொம்பத் திமிர் பிடித்தவன். கண்ணதாசன் சிந்தனையைக் கடன்வாங்கினால் அவன் இறைவன்.

6

கூர்மையான வரிகளுக்காகப் பேனாவால் மண்டையைச் சொறிந்து கொள்கிறோம். சிலசமயம் படிப்பவர்களை குத்தித் தொலைத்துவிடுகிறோம்.

ஆனால் ஹென்றி போர்ட் போகிற போக்கில் உதிர்த்தவையெல்லாம் இன்று மேலாண்மை இயக்குனர்களின் பைபிள்.

7

திரு. ரத்தன் டாடாவுக்கு மட்டுமல்ல, டாக்டர் அன்புமணி ராமதாசுக்கும் ஹென்றி போர்டு முன்னோடி.

புகைபிடிப்பது தவணைமுறைத் தற்கொலை என்று அவரும் எடிசனும் பிரச்சாரம் செய்திருக்கிறார்கள்.

8

தொழிலாளர்களுக்கு ஊதியத்தை இருமடங்காக்கி அமெரிக்க முதலாளிகளைத் திகைக்க வைத்தவரும் இவர்தான்.

பிற்காலத்தில் அமெரிக்க தேசியத் தொழில் உறவுச் சட்டத்துக்குப் பணிந்தவரும் இவர்தான்.

9

இவருடைய கனவுகளுக்கு சக்கரங்கள் மட்டுமா இருந்தன? இறக்கைகளும் இருந்தன.

இரண்டாம் உலகப் போரின் போது எட்டாயிரம் விமானங்கள் தயாரித்தது ஃபோர்ட் மோட்டார் நிறுவனம்.

10.

புயல் எத்தனை முறை வந்தாலும் தாக்குப்பிடிக்காது. புயலுக்கு ஒவ்வொரு முறையும் தாக்குப்பிடித்தால் போதும் என்று புரிந்துவைத்திருந்தார் ஃபோர்ட்.

பங்குச் சந்தையின் மிக மோசமான கரடி ஆதிக்க காலம் போல் இவருடைய தொழில் முயற்சிகள் முப்பது முதல் நாற்பது வயது வரை சறுக்கிக்கொண்டே இருந்தன.

இன்றைக்கு சென்னைக்கும் செங்கல்பட்டுக்கும் இடையில் கூட இவருடைய உலகளாவிய சாதனையின் ஒரு துண்டு கிடக்கிறது.

11.

அடுத்த இருநூறு ஆண்டுகளில் இந்தியாவில் ஆயிரம் ஹென்றி ஃபோர்டுகள் தோன்றுவார்கள்.

பாந்த்ரா-குர்லாவிலிருந்தோ.. பாப்பையநாயக்கன்பட்டியிலிருந்தோ...

12

ஹென்றி ஃபோர்ட் மிச்சிகனில் டியர்பார்ன் என்னும் பட்டிக்காட்டில் பிறந்தவர்.

நீங்கள் ஊர்க்குருவியும் இல்லை. பருந்தும் இல்லை. மனிதர்கள் கால்களைத் தரையில் ஊன்றிக் கொண்டே உயரப் பறக்க முடியும்.

ஒற்றையடிப் பாதை ஓடுபாதையாக இருக்கலாம். தப்பில்லை.

உங்களுக்குப்
பறவை மூளையென்று
யாரேனும் சொன்னாலும்
கழற்றி வைத்துவிடாதீர்கள்
இறக்கைகளை.

பொறாமை தான் பாராட்டுப் பத்திரம். 
----------------------------------------------------------------
-----சீனிராஜ் சிவகுமார்

Permalink 
By  Seeniraj Sivakumar   12:28 | 3/Oct/2007 | 3 Comment(s)
பசுமைப் புரட்சி

மருத நிலமா பாலை நிலமா என்று புரியாத ஒரு பிரதேசத்தில் திருகு சொம்பு, தூக்கு வாளி தூக்கி வந்த உழத்தியிடம் உழவன் சொன்னது.

காலடியில் நிழல்பதுங்கும் உச்சி வேளை
   காற்றே தீ போலாகிக் கருக்கும் நாளில்
நீலகிரி மலைக்குளிராய் வந்து சேர்ந்தாய்
    குளிராக வந்தென்னைப் போர்த்திக் கொண்டாய்.
நாலுதிசை பார்த்துவிட்டுக் குறும்பு செய்தேன்
    நாணமுள்ள பெண்ணாகக் காட்டிக் கொண்டாய்
ஆலமரம் அதில் காகம் இருப்ப தையே
    அய்யய்யோ மறந்துவிட்டோம் போச்சே மானம்

கட்டைவிரல் வரிகள்போல் உழுது விட்டுக்
    களத்துமேட்டில் ஓய்வெடுக்கும் டக்கர் வண்டி1
கட்டழகே எனக்குமட்டும் ஓய்வில் லையா?
    களைச்சிருக்கேன் எங்கேம்மா தூக்கு வாளி?
விட்டுவிட்ட பாகங்கள் மண்ணில் கூட
    வெளிறிப்போய்க் காத்திருக்கும் கலப்பைக்காக.
திட்டமிட்ட பரப்பெல்லாம் உழுது விட்டுத்
    திரும்பிவந்த பின் தணிப்பேன் உனது தாகம்.

திருச்செந்தூர் ரோட்டிலுள்ள தொழிற்சா லையில்
    டீ.ஏ.பி2 உற்பத்தி தொடங்கி ருச்சாம்
உரக்கடையில் உன் தம்பி தகவல் சொன்னான்
    ஒத்தாசை செய்வதாக ஒத்துக் கிட்டான்.
அரைக்கிணறு நிறைஞ்சிருக்கே ஆச்சர்யந் தான்.
    அங்காள ஈஸ்வரியின் அருள் தான் எல்லாம்.
எரிஞ்சுபோன மோட்டாரில் காயில் மாத்தி
    ஏழுநாளில் கட்டவேணும் வாய்க்கால் பாத்தி.

பம்பு செட்டு மூணுநாளு வேணுமின்னு
    பங்காளி கேட்டிருக்கான், கொடுக்க லைன்னா
வம்பாகி வாய்க்காலில் தண்ணி யில்ல
    வாங்கிய கை துண்டாகி ரத்தம் பாயும்.
எம்பாகம் பெரிசுன்னு சொல்லிப் பாத்தும்
    எடுபட்ட பயலுக்குப் புரிய வில்ல
கொம்பு சீவி நிக்கிறாண்டி காதைப் பொத்தி.
    கிறுக்கனுக்குக் கழண்டுருச்சோ இருக்கும் புத்தி?

பருத்தியுடன் உளுந்தையும் போட வேணும்
    பக்கத்தூர் ஆட்களைத்தான் தேட வேணும்.
கரண்டுசப்ளை தினம் மதியம் வருமின் னாங்க.3
    கண்ணுலயே கரண்டெப்படி வச்சி ருக்கே?
சரிஞ்சிருக்கு முந்தானை எடுத்துப் போடு
    சரி சரி நான் என்ன சொன்னேன் எங்கே விட்டேன்?
மறுகரையில் கொத்தூரில்4 ராமசாமி
    மருந்தடிக்கக் கூப்பிட்டாத் Ī